Wednesday, October 31, 2007

கதை கேளு... கதை கேளு!

இன்றைய உலகம் பரபரப்பு மிகுந்ததாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு காரணத்திற்காக நேரத்துடன் போட்டிபோட்டு ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
வருங்காலத் தூண்களான மாணவ மணிகளின் பொன்னான ஓய்வுநேரத்தை தொலைக்காட்சிகளும்,திரைப்படங்களும்,விளையாட்டுகளும் பறித்துக்கொள்கின்றன.
இந்தக் காலமாற்றத்தில் காணாமல் போனது- சிறார்களின் வாசிக்கும் பழக்கம்தான். நல்ல நூல்களை, கதைகளைப் படிக்கும் சிறுவர்கள் இப்போது அரிதாகிவிட்டனர்.
பள்ளிப்பாடங்களில் "சூரப்புலிகளாக," இருக்கும் சிறுவர்களில்கூட பெரும்பாலானவர்கள் பொது அறிவில் பூஜ்யமாக இருப்பது வேதனைக்குரியது. இதற்குப் பெற்றோரும் ஒரு காரணம். "பிள்ளைகள் பாடத்தை ஒழுங்காகப் படித்தால் போதும்; கதைகளை எல்லாம் படித்து ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்,"என அவர்கள் நினைக்கின்றனர்.
தெனாலிராமன், பீர்பால் கதைகள் பற்றிக் கூறினால், இவர்கள் எல்லாம் யார் என்று மிக அலட்சியமாக கேட்கின்றனர் இந்தக் காலத்துச் சிறார்கள்.
குழந்தைகளைக் கணினி மையத்திலும், கராத்தே வகுப்பிலும் சேர்த்துவிட ஆர்வம்காட்டும் பெற்றோர்கள், அவர்களை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்த்துவிட வேண்டும் என யோசிக்கவாவது செய்கிறார்களா? இல்லை.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டுச் சிறுவர்களை எல்லாம் வசீகரம் செய்த "ஹாரிபாட்டர்"புத்தகம் குறித்து அனைவரும் அறிவர். அது வெறும் சாகச, மந்திரஜாலக் கதைதான். ஆனால், அந்தப் புத்தகத்தைப் படிக்க வெளிநாட்டுச் சிறுவர்கள் காட்டிய ஆர்வம், இலட்சக்கணக்கான பிரதிகள் விற்பனை போன்றவை பிரமிப்பை ஏற்படுத்தின.
இயந்திரத்தனமான வாழ்க்கை வாழும் வெளிநாட்டுச் சிறுவர்களே ஒரு புத்தகத்தை நாள்கணக்கில் காத்திருந்து வாங்கிப் படிக்கிறார்கள் என்றால், இலக்கியத்திற்கும் இதிகாசங்களுக்கும் பெயர்பெற்ற நம்நாட்டில் எங்கே போனது சிறார்களின் வாசிக்கும் பழக்கம்? நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்.
நல்ல கதைகளைப் படிக்கும்போது, சிந்தனை வளம், கற்பனை ஆற்றல் பெருகும். இன்று பெற்றோராக இருப்பவர்களில் பலர் அந்த அனுபவத்தை உணர்ந்திருப்பர். பின்னர் ஏன் அந்தப் பழக்கத்தை தங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்துவைக்கத் தயங்குகின்றனர்?
இந்தக் காலச் சிறார்களின் சிந்தனை பல வழிகளில் சிதறடிக்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பின்போது, நடிகர்களுடன் பேசுவதற்காக தொலைபேசியில் தொடர்புகொண்டு, "நான் ஒருமணி நேரமாக முயன்றும் இப்போதுதான் இணைப்பு கிடைத்தது'' என ஏதோ சாதனை(?) படைத்ததுபோல சிறுவர்கள் கூறும்போது, வேதனையே ஏற்படுகிறது.
சுமார் பத்து - பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டங்களில், நூலகங்களில் சிறார்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். சிறுவர் இதழ்களைப் படிக்க அவர்களுக்குள் பெரும் போட்டியே நடக்கும். ஆனால், தற்போது நூலகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சிறுவர்கள் மட்டுமன்றி, இளைஞர்களையும் நூலகங்களில் அதிகமாகக் காணமுடிவதில்லை.
கிராமப்புறங்களைவிட நகர்ப்பகுதிகளில் நிலைமை இன்னும் மோசம். திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் போதாதென்று புதிய அவதாரமாக வந்திருக்கும் "விடியோகேம்ஸ்" விளையாட்டுகளில் சிறார்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
புரியாத திரைப்படப் பாடல்களையும் வரி பிசகாமல் பாடும் சிறார்களில், எத்தனை பேருக்கு எத்தனை திருக்குறள் தெரியும்? பாரதியின் பாடல்களை வாசித்தாவது அறிந்திருக்கிறார்களா?
கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவிட்ட இக்காலத்தில் தாத்தா, பாட்டிகளிடம் கதைகேட்கும் வாய்ப்பும் சிறார்களுக்கு அரிதாகிவிட்டது.
வேகமான சமூக மாற்றத்திற்கு நம் பாரம்பரியத்தைப் பலிகொடுக்கக் கூடாது. நல்ல இலக்கியங்கள் போன தலைமுறையோடு போய்விடக்கூடாது. இந்த நிலையை மாற்றும் பெரும் பொறுப்பு பெற்றோருக்குதான் உண்டு.
விளையாட்டுகள், பொழுதுபோக்குகளுக்கு மத்தியில் தரமான புத்தகங்களையும் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டும். புத்தக வாசிப்பில் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி, புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
விழாக்களுக்குச் செல்லும்போது, பரிசுப் பொருட்களுக்குப் பதிலாக புத்தகங்களை வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை இயன்ற அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளின்போது, கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு புத்தகங்கள் விற்பனை ஆவது சற்று ஆறுதலான விஷயம். ஆனால், அங்கும் குழந்தைகளுக்கான புத்தகங்களின் விற்பனை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.
தமிழில் குழந்தைகளுக்கான கதைகள், புத்தகங்கள் குறைந்துள்ளன என்பது ஒருசாராரின் வாதம். அதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நன்றாக விற்பனை ஆகும் புத்தகங்கள் என்று வரிசைப்படுத்திக் கொண்டு, அதுபோன்ற புத்தகங்களையே பல பதிப்பகங்கள் பதிக்கின்றன. சமூகப் பொறுப்பை உணர்ந்து குழந்தைகளுக்கான புத்தகங்களை அதிக அளவில் பதிப்பிக்க பதிப்பகங்களும் முன்வர வேண்டும். குழந்தைகளின் அறிவை விருத்தி செய்வதில் புத்தகங்களுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எஸ். ராஜாராம்

நன்றி: தினமணி - http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20071012103550&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist=0

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home